போட்டி THE CONTEST 62-12-31 பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா 1. அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள், இல்லையா? அற்புதமான கர்த்தர்! அவர் மேல் நம்பிக்கையாயிருப்பது எவ்வளவு இனிமையானது. இன்றிரவு உங்களுக்கு அருமையான தருணம் உண்டாயிருந்தது என்று உறுதியாக எண்ணுகிறேன், சில நிமிடங்களுக்கு முன்பு கதவைத் திறந்த போது, சகோதரி கெர்டி "இன்னும் ஒரு மணி நேரம்தான். இறுகப்பிடித்திரு' என்னும் பழமையான பாடலைப் பாடுவதைக் கேட்டேன். அது, நான் சுவிசேஷ வேலைக்காக அன்றொரு முறை செல்வதற்கு சற்று முன்பிருந்த என் சிறு சபையை என் ஞாபகத்திற்கு கொண்டு வந்தது. எனக்கு முன்னால் உள்ள பழைய உத்திரத்தில் எழுதப்பட்டுள்ள 'முதலாவது தேவனைத் தேடுங்கள்'' என்பதை தேடிக்கொண்டிருக்கிறேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சமி டேவிட்ஸ ன் (Sammy Davidson) அதை எழுதினது எனக்கு நினைவிருக்கிறது. மறுபக்கத்தில் “உன் நித்தியத்தை எங்கு கழிப்பாய்? யோசித்துப்பார்'' என்று எழுதப்பட்டிருந்ததென்று நினைக்கிறேன். இங்கு கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீ, சிங்கங்களின் குகையில் தானியேல் ஆகியவைகளின் சித்திரம். ஓ, என்னே! அன்று முதல் காரியங்கள் நிகழ்ந்து விட்டன.  2. இன்று பிற்பகல் சுமார் ஐந்து மணிக்கு எனக்கு ஒரு அவசர தொலைபேசி அழைப்பு இருபது, முப்பது மைல் தொலைவிலுள்ள இடத்திலிருந்து வந்தது. அது மரித்துக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீயைக் குறித்ததாகும். அவர்கள் விலையேறப்பெற்ற நண்பர், ஜார்ஜ் கார்டர் என்பவரின் தாயார், நான் இங்கு திரும்பி வரும் வரைக்கும் பொறுப்பேற்க நிறைய போதகர்கள் இங்குள்ளனர் என்பதை அறிந்திருந்தேன், ஈடித்தின் நிலைமையும் மிகவும் மோசமாயிருந்தது. நாங்கள் அங்கிருந்தபோது, தேவனாகிய கர்த்தர் காட்சியில் வந்தார். இப்பொழுது சகோதரி கார்டர் மரணத்திலிருந்து வெகு தூரம் இருக்கிறார்கள். எனவே, அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.  3. இராப்போஜன ஆராதனைக்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் சுமார் பன்னிரெண்டு மணிக்கு அதை வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எப்பொழுது அதை கொடுக்க தீர்மானித்திருக்கிறீர்கள்? (“இப்பொழுது முதல் பதினொன்றரை மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும்” என்று சகோ. நெவில் கூறுகிறார் - ஆசி). நமக்கு மனதில் தோன்றும் எந்த நேரத்திலாகிலும் ... இன்றிரவு எத்தனை பேர் இராப்போஜனம் எடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள், உங்கள் கைகளையுயர்த்துங்கள் பார்க்கலாம், ஓ, அது மிகவும் அருமையானது. சரி. நான் ஓரிரண்டு வார்த்தைகளைப் பேச விரும்புகிறேன். என் கடிகாரத்தை இங்கு வைத்து, சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு பேசலாம் என்றிருக்கிறேன். பிறகு நாம் இராப்போஜனத்தை ஆரம்பிப்போம். அவரை நீங்கள் நேசிக்கின்றீர்களா? ஆமென். உங்களுக்கு மகத்தான தருணம் உண்டாயிருந்ததென்று எண்ணுகிறேன், இல்லையா?  4. ஓஹையோவிலிருந்து இவ்வளவு தூரம் சகோ. தாமஸ் கிட்டும், சகோதரி கிட்டும் வந்துள்ளனர். அவர்கள் ஊழியத்தில் இறங்கி விட்டார்களென்று நினைக்கிறேன். ஓ, அது மிகவும் சிறந்தது. இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறதென்று நம்புகிறேன். இது ஒலிப்பதிவாகுமென்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஊழியத்தை விடவில்லை. அவர்களுக்கு நூறு வயதாக இன்னும் சில நாட்களே உள்ளன. அப்படிப்பட்ட வர்களைக் காண்பது எனக்கு தைரியமூட்டுகிறது. யோசித்து பாருங்கள், நானே வயது சென்றவன், நான் பிறப்பதற்கு முன்னமே இவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர், இப்பொழுது எனக்கு வயதாகி விட்டது. அவர்களால் சத்தமாக பேச முடியாமல் போனதால், அவர்கள் ஒரு ஒலிப்பதிவு கருவியை எடுத்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக வீடு வீடாகச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கின்றனர். அது சிறந்த செயல், ஆமென். நான் அவர்களுக்காகவும் இந்த ஆராதனைகளில் கலந்து கொள்பவர்களுக்காகவும் மிக்க மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன்.  5. இதை இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், சபை கட்டிடம் கட்டி முடிந்தவுடனே - அது பிப்ரவரி பத்தாம் தேதியளவில் முடியுமென்று கூறப்படுகின்றது - கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் குறைந்தது எட்டு அல்லது பத்து நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தி லுள்ள ஏழு முத்திரைகளை எடுத்துக்கொண்டு பேச விரும்புகிறோம். நாங்கள் சுற்றிலுமிருந்து இங்கு வருபவர்களுக்கு அஞ்சல் வழியாக இங்கிருந்து அறிவிப்போம். அவர்கள் வர விரும்பினால், அதற்கு ஆயத்தம் செய்ய அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கும். நீங்கள் வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைவோம். ஏழு சபைக் காலங் களைக் குறித்து நாம் சென்ற முறை பிரசங்கித்த போது, தேவனுடைய சமுகம் நமது மத்தியில் இருந்த விதமாக, அப்பொழுதும் தேவன் தமது சமுகத்தை வெளிப்படுத்தக் கூடும். 6. நீங்கள் யாருக்காவது ஜெபிக்க விரும்பினால், என்னை எல்லா நேரங்களிலும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது எனக்கு உண்மையாகவே அவசியமாயுள்ளது. நாம் தொடங்கு வதற்கு முன்பு, சில காரியங்களைக் கூற இந்த பத்து பதினைந்து நிமிடங்கள் மாத்திரமே எடுத்துக் கொள்வதைக் குறித்து எனக்கு அவமானமாயுள்ளது. நாம் சற்று நேரம் தலை வணங்குவோம். 7. கர்த்தராகிய இயேசுவே, என்றாவது ஒருநாள் யுத்தம் முடிந்து விடும். அப்பொழுது ஜெபம் செய்யப்படுவதற்காக வியாதியஸ்தர் எவரும் இருக்கமாட்டார்கள். மனந்திரும்புவதற்கு பாவிகள் எவருமே இருக்கமாட்டார்கள். ஆனால் பிதாவே, இப்பொழு துள்ள இந்த நாளில், கிரியை செய்வதற்காக எங்களுக்கு வெளிச்சம் உள்ளபோதே நாங்கள் கிரியை செய்வோமாக. ஏனெனில் ஒருவரும் கிரியை செய்யக்கூடாத நேரம் வரப்போகின்றது ஆண்டவரே, இப்பொழுது சிறிது நேரம் பேச விரும்புகிறேன். அப்படி செய்யாமற்போனால், எனக்கு வருத்தமாயிருக்கும். இன்னும் அதிகமான வார்த்தைகளைக் கூறாமலேயே இந்த ஆண்டை நான் முடிக்கின்றேன். பிதாவே, உமது ஜனங்களின் இருதயத்தில் தைரியத்தை பதிய வைப்பதற்கு ஏதுவான ஒன்றை நான் பேசும் படியாக எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நாங்கள் இராப்போஜனத்தில் பங்கு கொண்டு இவ்விடம் விட்டுச்செல்ல அருள்புரியும். இராப்போஜனத்தின் மூலம் பெலன் கிடைக்கிறதென்று நாங்கள் உணருகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் இராப்போஜனத்தில் பங்கு கொண்டு விட்டு, நாற்பது ஆண்டுகளாக அவர்கள் பாதரட்சைகள் தேயாமலும் ஆடைகள் கிழியாமலும் நடந்து சென்றனர். அந்த இருபது லட்சம் பேர்களில் ஒருவராவது வனாந்திரத்தில் பெலவீனமாக இல்லை. கர்த்தாவே, இந்த மகத்தான நேரத்தை அணுகிக்கொண்டிருக்கும் இச் சமயத்தில், அதை நாங்கள் நினைவுகூரும்படி செய்யும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.  8. இன்று பிற்பகல் தொடங்க வேண்டுமென்று நினைத்து அந்த பொருளுக்காக எழுதி வைத்த குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு நான் பேசத் தொடங்கினால், நாம் விடியற்காலை ஐந்து மணி வரை இங்கேயே இருக்க நேரிடும் (சகோ. நெவில், "பரவா யில்லை'' என்றார் - ஆசி). ஆனால் நான் ஒரே ஒருவசனத்தை மாத்திரம்..... நன்றி. எபேசியர் 6ம் அதிகாரம் 12ம் வசனம். தைரியத்திற்காக, சிலநிமிடங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத் தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களி லுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபே . 6:12 9. "வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகள்'' இதிலிருந்து ஒரு பொருளை தெரிந்து கொண்டு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேச விரும்புகிறேன். அதை "போட்டி" என்று அழைக்க விரும்புகிறேன், போட்டி என்பது பலப்பரீட்சை. நமக்கு பலம்.... நாம் பலப்பரீட்சை செய்கிறோம். முன் காலத்தில் சிவப்பு இந்தியர்கள் தீ மூட்டி, கயிற்றின் ஒரு முனையில் இவ்வளவு ஆட்களையும் மறு முனையில் இவ்வளவு ஆட்களையும் வைத்து கயிறிழுப்பு போட்டி (tug-of-war) நடத்தி பலப்பரீட்சை செய்வார்கள். ஜெயிக்கும் கோஷ்டி தோற்கும் கோஷ்டியை தீயின் வழியாக இழுக்கும். அநேக காரியங்கள் உண்டு என்று நாமறிவோம். ஆனால் போட்டி என்பதை ஆதாரமாகக் கொண்டு ஒரு சில நிமிடங்கள் வேகமாக, சபைக்கும் சாத்தானுக்கும் இடையே யுள்ள மிகப்பெரிய போட்டியை குறித்து பேசவிரும்புகிறேன். சாத்தானின் அந்த மிகுந்த பலம். சபையில் உள்ள தேவனுடைய மிகுந்த பலத்தைக் குறித்து நாம் பேச விரும்புகிறோம்' 10. இந்த பெரிய போட்டி அநேக ஆண்டுகளாக நடந்து வருகிறது. அது பரலோகத்தில் தொடங்கினது. சாத்தான் பூமிக்கு உதைத்து தள்ளப்பட்டான். அப்பொழுது அவன் தேவனுடைய பிள்ளைகளுக்கு சத்துருவானான். அன்று முதற்கொண்டு, அவன் தனது எல்லா பலத்தையும், யுக்தியையும் கையாண்டு, தேவனுடைய பிள்ளைகளைத் தீயின் வழியாக அல்லது தீக்குள் தள்ளப்பார்க் கிறான்.  11. ஆனால் யாருக்கு மிகவும் அதிக வல்லமையுள்ளதென்று நாமறிவோம். அது தேவனே. சாத்தானுடன் போரிட தேவன் தமது ஜனங்களுக்கு சிறந்த ஒன்றைக் கொடுத்தார்; அது தான் வார்த்தை. வார்த்தையே தேவன். தேவனை காட்டிலும் பெலசாலி யார்? எனவே, வார்த்தை தேவனாயிருப்பதால், அது நமது பெலனாகி விடுகிறது. தேவன் தமது சபையில் பெலனாக அமைந்திருந்து, சாத்தான் மூட்டின தீயில் அவனையே இழுத்து தள்ளுகிறார். இந்த கயிறிழுப்பு நடந்து கொண்டேயிருக்கிறது. இயேசு, "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்" என்று மாற்கு 16ம் அதிகாரத்தில் கூறியுள்ளார்.  12. ஜனங்கள் கூறும் ஒரு பழஞ்சொல் உண்டு... பழஞ்சொல் உண்டு, அதாவது.... அது மிகவும் பழையதல்ல. இக்காலத்தில் ஜனங்கள், பிசாசுகள் இருப்பதாக நம்புவது கிடையாது. ஆனால் என் கருத்து என்னவெனில், செய்ய வேண்டிய காரியம் உங்கள் சத்துருவை அறிந்து கொண்டு, அவனை சந்திக்கும் போது உண்டாகும் போட்டிக்காக நீங்கள் பயிற்சி பெற வேண்டும். ஏனெனில் அவனை நீங்கள் சந்திக்கப் போகின்றீர்கள். அவனுடைய பலம் எத்தகையது என்பதை அறிந்து கொண்டு, அதன் பின்பு, அவனைச் சந்திக்கும் போது நேரிடப்போகும் போட்டிக்காக பயிற்சி பெறுதல் அவசியம். ஏனெனில் ஒன்று மாத்திரம் நிச்சயம். நீங்கள் அவனை சந்திக்க போகின்றீர்கள். எனவே போட்டிக்காக நீங்கள் பயிற்சி பெற வேண்டும்.  13. குத்து சண்டை வீரன் போட்டிக்கு பயிற்சி பெறுவது போல். குத்து சண்டை போட்டியில் அவன் எதிரியை சந்திக்கப் போகின்றான். ஒரு நல்ல குத்து சண்டை வீரன், அவனுடைய எதிரியைக் குறித்து நன்றாக ஆராய்கிறான். அவனுடைய குத்துக்களைக் குறித்தும், அவன் எங்கு நகர்ந்து சண்டை செய்கிறான் என்றும், அவன் முன்னால் குனிகின்றானா பின்னால் சாய்கின்றானா என்றும், அவன் வலது கை குத்து சண்டைக்காரனா , இடது கை குத்து சண்டைக்காரனா என்றெல்லாம் ஆராய்ந்து அறிந்து கொள்கிறான். பிறகு, அவன் உண்மையில் நல்ல குத்து சண்டைக்காரனாயிருந்தால், அவனுடைய எதிரியை போலவே சண்டையிடும் குத்துச் சண்டை கூட்டாளி (sparring partner) ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் சண்டையிட்டு பழகுகிறான். அப்பொழுது அவன் போட்டிக்குச் செல்லும்போது, எதிரியின் உபாயங்கள் அனைத்தையும் அறிந்திருப் பான். 14. அப்படி கிறிஸ்தவர்கள் செய்வது நல்லதென்று எண்ணுகிறேன். அது உண்மை . நீங்கள் பயிற்சி பெற வேண்டுமானால், அந்த பொன்னான விதியாகிய (Golden Rule) யோவான் 3:16ல் தொடங்குங்கள். அதில் தொடங்குங்கள், அது உங்களை குத்துச் சண்டையிடும் இடத்திற்கு கொண்டு செல்லும். பிறகு எதிரியைத் தரையில் வீழ்த்தக் கூடிய குத்துக்களைப் பழகுங்கள். ஏனெனில் நீங்கள் அவைகளை உபயோகிக்க வேண்டியிருக்கும், அது எல்லோருக்குமே தெரியும். உங்கள் எதிரியைக் குத்துவதற்கு நீங்கள் பழக வேண்டும். தேவன் எப்பொழுதுமே தமது வார்த்தையை உபயோ கிக்கிறார். தமது சத்துருவை தோற்கடிக்க தேவன் தமது வார்த் தையை உபயோகிக்கிறார் என்பதை நாம் ஞாபகம் கொள்ள வேண்டும். சத்துருவைத் தோற்கடிக்க அதைக் காட்டிலும் சிறந்த ஒன்றை அவரால் தமது ஜனங்களுக்கு கொடுத்திருக்க முடியு மானால், அவர் கொடுத்திருப்பார். "தேவன் ஒரு தீர்மானம் செய்வாரானால், அதுவே மிகச் சிறந்த தீர்மானம். அவர் தமது தீர்மானத்தை மாற்றவே அவசியமிராது'' என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. சத்துருவை எதிர்த்து போரிட தேவன் தமது ஜனங்களுக்கு ஏதேன் தோட்டத்தில் முதன் முதலாக கொடுக்க வேண்டுமென்று எடுத்த தீர்மானம் வார்த்தையே . அவர்கள் அவருடைய வார்த்தையை அரணாகக் கொண்டிருந்தனர். 15. சத்துருவும், நாம் வார்த்தையின் அடிப்படையில் கொண்டுள்ள யுக்தியை ஆராய்ந்து பார்ப்பான். சாத்தான் அது அனைத்தையும் பரிபூரணமாக ஆராய்ந்து படித்து விட்டு, முடிவில் ஏவாளிடம் தனது மிகச்சிறந்த யுக்தியைக் கையாண்டான். அது தான் வார்த்தையை அறிவைக் கொண்டு யோசிப்பதாகும். நீங்கள் தேவனுடைய வார்த்தையை யோசித்து பார்க்கக் கூடாது. அதை அப்படியே விசுவாசியுங்கள். அதற்கு விளக்கம் தர முயலாதீர்கள். அது இப்படியிருக்குமோ என்று யோசித்து பார்க்காதீர்கள். தேவனை நீங்கள் யோசித்து அறிந்து கொள்ள முடியாது. தேவன் வார்த்தையாயிருக்கிறார். அதை அப்படியே விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக அது அளிக்கப்பட்டுள்ளது. அதுவே நமது பெலன், வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். சரியான நிலத்தில் விழுந்த விதை அதன் இனத்தை முளைப்பிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். நாம் வார்த்தையை ஏற்றுக் கொள்ளுகிறோம்.  16. ஏவாளோ அறிவை உபயோகித்து யோசிக்க ஆரம்பித்தாள்... அவள் சாத்தானிடம் வார்த்தையை எடுத்துரைத்தாள்; "நீ புசிக்கக் கூடாது. நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று கர்த்தர் கூறினார் என்பதாக.  17. சாத்தான் அவளுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அவன், "நிச்சயமாக, அது உண்மை தான்” என்று கூறிவிட்டு, "ஆனால் பார், உனக்கு புது வெளிச்சம் தேவையாயுள்ளது" என்றான். தேவன் கூறினதிலிருந்து சிறிதளவு வித்தியாசமான ஒன்று. “அப்படி செய்வாயானால், நீ சிறிது புத்திசாலியாகி விடுவாய். உன் கண்கள் திறக்கப்படும்” என்றான். அவள், “நாங்கள் சாவோம் என்று தேவன் கூறினாரே” என்றாள். 18. அவன், “ஓ, நிச்சயமாக...” என்றான். பாருங்கள், அது வரைக்கும் நீங்கள் வருகின்றீர்கள், அவன், "நிச்சயமாக நீங்கள் சாகவே சாவதில்லை" என்றான். "நீங்கள் சாவீர்கள்" என்று கர்த்தர் கூறினார், அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது! அது கயிறிழுப்பு போட்டியில் மானிடவர்க்கம் முழுவதையுமே மரணத்தில் இழுத்து தள்ளியது. ஏனெனில் ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக யோசனைக்கு செவி கொடுத்தாள். அவள் அவ்வாறு செய்தது பெருத்த அவமானம், ஆனால் அது முற்காலத்தில் நடந்து விட்டது. ஆனால் நாம் இப்பொழுதும் அரணிடப்பட்டிருக்கும், முறிந்து போன அந்த சங்கிலித் தொடர், கிறிஸ்து இயேசுவுக்குள் மீண்டும் சரிப்படுத்தப்பட்டது. அது நமக்குத் தெரியும். தேவன் நமக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை அருளியுள்ளார், அவருடைய வார்த்தையை அப்படியே விசுவாசித்தாலே அது. 19. இன்றைக்கு அநேகர், பிசாசு என்று ஒன்று கிடையாது என்கின்றனர். அது ஏதோ ஒரு எண்ணம் என்று அவர்கள் நம்புகின்றனர். பரிசுத்த ஆவி என்பது ஒரு நல்ல எண்ணம் என்றும் பிசாசு என்பது ஒரு கெட்ட எண்ணம் என்றும் நம்பும் மக்கள் உள்ளனர். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், வேதாகமம் பரிசுத்த ஆவியைக் குறித்து உரைக்கும் போது ''பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது'' என்கின்றது. "அவர்' என்று தனிப்பட்ட பிரதிப் பெயர் (personal Pronoun). பாருங்கள்? அவர், அவர் ஒரு ஆள், பிசாசும் ஒரு ஆள், பிசாசுகள் ஆட்கள். ஆம், அவை பிசாசுகள், அவை அநேக வழிகளில் வருகின்றன. ஆனால் ஜனங்களோ அது பழமை நாகரீகமுள்ள கருத்து என்று நினைக்கின்றனர்.  20. சில வாரங்களுக்கு முன்பு ஒருவர் என்னிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தார். அவர், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் தெரியுமா? நீங்கள் ஜனங்களிடம் ஒன்றைக் கூறி, ஜனங்களுடைய மனதில் அந்த எண்ணத்தை நுழைத்து விடுகின்றீர்கள். அது எண்ணத்தில் ஏற்பட்ட மாற்றமே" என்றார்.  21. இதே விதமான ஒன்றை ஒருமுறை நான் இந்தியாவில் சந்தித்தேன். அங்கு பரிசுத்த மனிதர்கள் குழுமியிருந்தனர். நான் இதுவரை பேசினது அதுவே மிகத்திரளான கூட்டத்தைக் கொண்டிருந்தது. ஒரே கூட்டத்தில் ஐந்து லட்சம் பேர் கூடியிருந்தனர். அந்த எதிர்ப்பை பகுத்தறிதலின் மூலம் ஆவியில் உணர்ந்தேன். பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தின் மத்தியிலிருந்து ஜனங்களை பெயர் சொல்லி அழைத்து வெவ்வேறு காரியங்களைக் கூறினதை அவர்கள் கண்டனர். அவர்களுடைய சிந்தையை நான் பகுத்தறிந்தேன் - அங்கிருந்த ராஜாக்கள், பரிசுத்த மனிதர்களின் சிந்தையை. அவர்கள், "அவர் மனோதத்துவத்தினால் மனதிலுள் ளதை அறிந்து கூறுகின்றார்'' என்றனர்.  22. சிறிது நேரம்கழித்து, ஐந்து அல்லது ஆறுபேர்கள் ஜெப வரிசையில் கடந்து சென்றவுடனே, ஒரு குருடன் வந்தான். அவன் முழுவதும் குருடாயிருந்தான். அவனுடைய கண்கள் என் சட்டையைப் போல் வெள்ளையாக இருந்தன. நான், "இங்கு ஒரு குருடன் இருக்கிறான். அவன் குருடனென்று யாருமே காணலாம். என்னால் அவனுக்கு உதவி செய்ய முடியுமானால் நான் செய்வேன். அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒரேவழி, ஒரு வரத்தின் மூலம் அவன் செய்த ஏதாவதொன்றைக் கூறுவதாகும். அவன் செய்த ஒன்றை தேவன் அறிவாரானால், அவர் அவனுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதையும் நிச்சயம் அறிவார் என்னும் எண்ணத்தை அவனுக்குத் தரும். அவனைக் காணும் போது, அவன் சூரியனை வழிபடுபவன் என்று அறிகிறேன். அவன் இருபது ஆண்டுகளாக குருடாயிருக்கிறான்'' என்றேன். நான் கூறினதை மொழி பெயர்ப்பாளர் மொழிபெயர்த்தவுடனே, அது சரியென்று ஜனங்கள் அறிந்தனர். நான், "அவன் கலியாணமானவன். அவனு டைய மனைவி குள்ளமானவள். அவனுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர், ஒருவனுக்கு ஏழு வயது, மற்றவனுக்கு ஒன்பது வயது" என்றேன். அது முற்றிலும் சரியாயிருந்தது. அவர்களுடைய பெயர்கள் அழைக்கப்பட்டன.  23. பிறகு கூட்டத்தின் மத்தியிலிருந்து இந்த எதிர்ப்பு வந்தது, “இது மனோதத்துவத்தினால் விளைந்த ஒன்று, அதன் மூலம் மனதிலுள்ளதை அறிந்து கூறுதல்" என்பது போன்றவை.  24. நான், “கர்த்தாவே, நீர் மாத்திரம் எனக்குதவி செய்வீரானால் - கர்த்தாவே, உமது உதவி எனக்குத் தேவை. இந்த ஜனங்கள் இது மனோதத்துவத்தினால் விளைந்தது என்கின்றனர். கர்த்தாவே அது அப்படியல்லவென்று உமக்குத் தெரியும்" என்றேன். பிதாவானவர் தமக்கு ஒன்றைக் காண்பித்தாலொழிய, இயேசு தாமாக ஒன்றையும் செய்ததில்லை என்னும் வேதவாக்கியத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். பிறகு திரும்பி அந்த மனிதனை நான் மறுபடியும் நோக்கினபோது என் கண்கள் போன்று நல்ல கண்களை அவன் பெற்றிருப்பதை தரிசனத்தில் கண்டேன். நான் "இதுதான் சமயம்” என்று எண்ணினேன்.  25. நான், “இவன் சூரியனை வழிபடுபவன், அதனால் அவன் குருடாகி விட்டான்'' என்றேன். நான் தொடர்ந்து, "இங்கு முகம்மதிய மத குருக்களும், ஷியாக்கள், ஜைனர்கள், புத்தமதத்தினர் போன்ற வெவ்வேறு மதகுருக்களும் உள்ளனர். அவன் சிருஷ்டிகருக்குப் பதிலாக சிருஷ்டியை தொழுதான் என்று நீங்கள் கூறலாம். நானும் அதை விசுவாசிக்கிறேன். இன்றிரவு நாமனைவரும் ஒன்றாக இங்கு அமர்ந்திருக்கிறோம். இன்று ஜைனக் கோயிலில் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. என்னை பேட்டி காண அங்கு பதினேழு மதத்தினர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு விரோதமானவர்கள், உங்களில் அநேகர் அங்கிருந்தனர். கிறிஸ்து தவறாயிருந்து, இந்த மனிதன் சரியாயிருக்க விரும்பினால் நிச்சயமாக இவ்வுலகத்தை படைத்த சிருஷ்டிகர் ஒருவர் மாத்திரமே அவனுக்கு பார்வையளிக்க முடியும். அது நியாயமானது. இங்கு யாராகிலும்; முகம்மதிய மார்க்கம் முக்கியமான மார்க்கம். முகம்மதிய குரு ஒருவர் இங்கு வந்து அவனுக்கு பார்வையளிப்பாரானால், நான் முகம்மதிய மதத்தை தழுவுவேன். அல்லது புத்தமத குரு ஒருவர் வந்து அவனுக்கு பார்வையளித்தால், அவனைப் படைத்த தேவன்யாருடைய தேவனாவது சிருஷ்டிகராக இருக்கவேண்டும். ஏனெனில் சிருஷ்டிகர் இல்லாமல் சிருஷ்டிப்பு ஒன்று இருக்க முடியாது. அவனுக்கு பார்வையளிக்க சிருஷ்டிகரால் மாத்திரமே முடியும். அவன் சூரியனைப் பார்த்து பார்த்து, இருபது ஆண்டு காலமாக குருடாயிருக்கிறான். அப்படி செய்தால் அவன் பரலோகம் செல்வானென்று எண்ணினான். அந்த மனிதன் அறியாமையினால் அப்படி செய்தான். புத்தமத குருக்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள், அவன் கொண்டுள்ள கருத்தை மாற்றி விடுவீர்கள். அவன் தவறென்று நீங்கள் கூறுவீர்கள்'' என்றேன். அவர்கள் மரித்து போன முன்னோர்களை வழிபடுகின்றனர். நான் தொடர்ந்து, "அவன் தவறென்று நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? அவன் கொண்டுள்ள கருத்தை மாற்றி விடுவீர்கள். முகம்மதியர்கள் என்ன செய்வார்கள்? அவன் கொண்டுள்ள கருத்தை மாற்றி விடுவார்கள். ஷியாக்கள் ஜைனர்கள் அனைவருமே அவன் கொண்டுள்ள கருத்தை மாற்றி விடுவார்கள்'' என்றேன்.  26. “அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எங்களுக்கும் இதே உள்ளது. மெதோடிஸ்டுகள் பாப்டிஸ்டுகளை மெதோடிஸ்டுகளாக்க முனைகின்றனர், பெந்தெகொஸ்தேயினர் மெதோடிஸ்டுகளை பெந்தெ கொஸ்தேயினராக்க முனைகின்றனர். அது கருத்து மாற்றம். ஆனால் அதைக் குறித்து நாங்கள் பேசவில்லை. நாங்கள் சிருஷ்டிகராகிய தேவனைக் குறித்து பேசுகிறோம், சிருஷ்டிகர் நிச்சயம் பேசுவார்" என்றேன். அந்த தரிசனம் எனக்குக் கிடைக்காமலிருந்தால், இவ்வாறு கூறியிருக்க மாட்டேன். நான், "அவர் தேவனாயிருந்தால், அவர் வந்து இவனுக்கு பார்வையளிக்கட்டும்” என்றேன். நான் மேலும், "நான் எந்த ஒரு குருவுக்கும், ராஜாவுக்கும், பரிசுத்த மனிதனுக்கும் சவால் விடுகிறேன். யாராவது வந்து அவனுக்குப் பார்வையளிக்கட்டும். அப்பொழுது நான் உங்கள் தத்துவத்தைப் பின்பற்றுவேன், அப்பொழுது உங்கள் மதத்தில் ஒருவரை நீங்கள் சேர்த்தவராவீர்கள்'' என்றேன், அப்பொழுது நான் அதுவரை கண்டதிலேயே மிகவும் அமைதியான கூட்டமாக அது மாறினது. பாருங்கள்? யாருமே முன்வரவில்லை.  27. நான், "நீங்கள் ஏன் அமைதியாயிருக்கிறீர்கள்? உங்களால் அதை செய்ய முடியாது என்னும் காரணத்தால் தான் நீங்கள் அமைதியாயிருக்கிறீர்கள். என்னாலும் அதை செய்யமுடியாது. ஆனால் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பின பரலோகத்தின் தேவன், அவருடைய ஊழியக்காரனாகிய எனக்கு, இந்த மனிதன் பார்வையடையப் போகின்றான் என்று ஒரு தரிசனத்தைக் காண்பித்தார். அப்படி நடக்காவிட்டால், நீங்கள் என்னை இந்தியாவிலிருந்து துரத்தி விடலாம். ஆனால் அப்படி நடக்குமானால் உங்கள் ஒவ்வொருவருடைய ஜீவனையும் கிறிஸ்துவுக்கு அளிக்க நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள். உங்களைக் கேட்க விரும்புகிறேன், இந்த குருடன் பார்வையடைந்தால், இங்குள்ள எத்தனை பேர் உங்கள் ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு அளிப்பீர்கள்? உங்கள் குருக்களில் ஒருவரும் முன்வரவில்லை. அவர்களுடைய மதம் மிகப் பெரியது என்று அவர்கள் உங்களிடம் கூறியிருந்தால், பின்னை ஏன் அவர்கள் வரக்கூடாது? யாராகிலும் ஒருவர் வந்து, ஏதாகிலும் ஒன்றை ஏன் கூறக்கூடாது!" என்றேன். யாருமே வரவில்லை. நான், "அங்குள்ள ஜனங்களாகிய நீங்கள் இங்கு நின்று கொண்டிருக்கும் குருடனை ...... ' என்றேன். 28. ஒரு மருத்துவர் மேலே அவனுடைய கண்களைப் பரிசோதித்தார். அவர், "அவன் குருடன் தான்" என்று தலையசைத்து ஆமோதித்தார்.  29. நான், "அவன் குருடன் என்பது உறுதி. தேவன் அவனுக்கு பார்வையளிப்பாரானால், உங்களில் எத்தனை பேர் இயேசு கிறிஸ்துவை சேவிப்பீர்கள்?'' என்று கேட்டேன். அப்பொழுது என்னால் காணக்கூடிய தூரத்துக்கு பல்லாயிரக் கணக்கான கறுத்த கைகள் உயர்த்தப்பட்டிருந்தன. நான் இந்த மனிதனிடம் திரும்பி, "கர்த்தராகிய இயேசுவே, நீரே தேவன் என்பது அறியப்படட்டும்" என்றேன். அந்த மனிதன் பார்வையடைந்து என் கழுத்தை கட்டிப் பிடித்துக் கொண்டான். அங்கு பம்பாயின் நகராண்மைத் தலைவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவன் அவருடைய கழுத்தைக் கட்டிப்பிடித்தான், மற்றவர்கள் செய்யக்கூடும் அளவுக்கு செய்தான். 30. அது என்ன? அது உண்மையாக ஒரு வல்லமை! தேவன் தேவனாயிருக்கிறார், சாத்தான் சாத்தானாயிருக்கிறான். நான் முதலில் தொடங்கின போது, நாள்தோறும் ஆலோசியாமல் அவனை சந்திப்பது வழக்கம். பிசாசு இல்லையென்று என்னிடம் கூற வேண்டாம். எனக்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரியும். அவனுடன் நான் நாள் தோறும் சண்டையிட வேண்டியதாயுள்ளது. எனவே பிசாசு என்று ஒருவன் இருக்கிறான் என்று எனக்குத் தெரியும். அவனைச் சந்திக்க நீங்கள் பயிற்சி பெறவேண்டும் - மனோதத்துவ பயிற்சி அல்ல, கல்வி பயிற்சி அல்ல, பரிசுத்த ஆவியானவரின் மூலம் பயிற்சி பெற வேண்டும். அதை வெளிப் படுத்த தேவனுடைய வார்த்தையிலுள்ள அவருடைய வல்லமை. உங்கள் சத்துருவை அறிந்து கொள்ளுங்கள். ஓ , அவன் எவ்வளவு கொடூரமானவன்! 31. இப்பொழுது இங்கு நின்று கொண்டு, இதில் நிலைகொண்டு, வேதத்திற்கு சென்று இதை முகமுகமாய் சந்தித்த ஒரு மனிதனை எவ்வளவாக உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்! சத்துருவுக்கு எதிராக நடந்த போட்டியில் அவர்களெல்லாரும் தங்களை தேவனு டைய வார்த்தையினால் அரணிட்டு கொண்டார்கள். நோவாவுக்கு அத்தகைய அனுபவம் இருந்தது. மழை பெய்யப் போகின்றது என்று தேவன் அவனிடம் கூறினார் என்று அவன் அறிந்திருந்தான். போட்டியானது விஞ்ஞானத்துக்கும் தேவனுடைய வார்த்தைக்கும் இடையே நடந்தது. “அது நடக்காது” என்று விஞ்ஞானம் கூறியது. "அது நடக்கும்” என்று தேவன் கூறினார். ஆமென்.  32. அதே காரியம் இன்றைக்கும் உள்ளது. அது நடக்கும்! அது நடந்து வருகிறது! பிசாசுகள் இருக்கின்றன! ஆனால் இயேசு அவைகளைத் துரத்தினார். அவ்வாறு செய்வதற்கு அவர் சபைக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார் - "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துங்கள்'' என்று. ஒரு நாள் அவர் ஒரு அழகான பெண்ணி லிருந்து ஏழு பிசாசுகளைத் துரத்தினார். அவர், "அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும் போது, வறண்ட இடங்களில் அலைந்து, திரும்பிப் போய் வேறு ஏழு பிசாசுகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டு வரும்” என்று கூறினார். ஒரு மனிதன் பிசாசுகள் இல்லாதபடி சுத்தமாயிருந்தால், அவனுக்குள் இருந்த ஒன்று வெளியே சென்று விட்டது என்பதை அது காண்பிக்கின்றது. பிசாசு வெளியேறிவிட்டது! பிசாசு வெளியே சென்றால், தேவன்... அது தேவன் உள்ளே வருவதற்கு ஒரு தருணத்தை யளிக்கிறது. எனவே அவன் வெளியேறும் போது, பரிசுத்த ஆவி உள்ளே வர அனுமதியுங்கள். அதை அப்படியே வெறுமையாக விட்டு விடாதீர்கள், நீங்கள் பாவத்திற்காக மாத்திரம் மனந்திரும்பி விட்டு சென்று கொண்டிருந்தால், நீங்கள் முன்னைவிட மோசமான நிலையையடைவீர்கள். சாத்தான் ஒருகாலத்தில் குடிகொண்டிருந்த அந்த இடத்தை தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிரப்புங்கள். அப்பொழுது உங்களுக்குள் தேவனுடைய வார்த்தையின் பெலன் தங்கி, அது வெளிப்படுத்தப்பட்டு, பிசாசுகள் துரத்தப்படும். போட்டி நடந்து கொண்டிருக்கிறது. சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய பரிசுத்த ஆவி பிரசன்னமாயுள்ளது.  33. புத்தாண்டு தொடங்குவதை அறிவிக்கும் ஊதல்கள் ஊதப்படுவதற்கு இன்னும் மூன்று நிமிடங்களே உள்ளன. அப்பொழுது நள்ளிரவாகும். இக்கட்டிடத்தை விட்டு வெவ்வேறு இடங்களி லுள்ள நம்முடைய வீடுகளுக்குத் திரும்பிச்சென்று, வெளியேயுள்ள உலகத்தை நாம் சந்திக்கும் போது, நமது பழைய நிலைமையிலேயே நாம் திரும்பிச்செல்லவேண்டாம். உயிர்த்தெழுந்த வல்லமையைக் கொண்டவர்களாய் நாம் திரும்பிச் செல்வோம். சத்துருவைச் சந்திக்க நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடியை உயர்த்தினவர்களாய் இருபுறமும் கருக்குள்ள அந்த பட்டயத்தை உபயோகிக்கத்தக்கதாக அவருடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டவர்களாய், கேடயத்தை கையில் பிடித்து, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொண்டவர்களாய் நாம் இங்கிருந்து செல்வோம். ஏனெனில் சத்துரு நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறான். சத்துரு வெள்ளம் போல் வரும்போது தேவனுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய் கொடியேற்றுவார். நாம் இந்த காரியங்களின் முடிவை அடைந்திருப்போமானால்... தேவரகசியங்கள் நமக்கு நிறைவேறி விட்டன. நாம் அதிக பலத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்சபையை எடுத்துக் கொள்ளப்படுதலில் மகிமைக்கு கொண்டு செல்வதற்கென மேலான சக்தியாகிய எடுத்துக்கொள்ளப்படும் சக்திக்காக, அதை நாம் பெறவேண்டும், நாம் ஜீவனுள்ள தேவனு டைய தாசர்கள் என்னும் அடிப்படையில் 63ம் ஆண்டை ஒரு சவாலுடன் சந்திப்போம். முன் காலத்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போல், நாமும் இவ்வுலகத்தின் பிசாசுகளுக்கு தலைவணங்காதிருப்போமாக. இப்பொழுது கூறப்பட்டவைகளை நம்முடன் கூட கொண்டு சென்று போரில் மும்முரமாக ஈடுபடுவோமாக. 34. ஊதல்களின் சத்தத்தை கேட்க நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த பயங்கரமான உஷ்ணமான இரவில் சத்துரு எழும்பிக்கொண்டிருந்தபோது, முசுக்கட்டை செடிகளில் பதுங்கியிருந்த தாவீதுக்கிருந்த உணர்ச்சியை போன்ற உணர்ச்சியை இன்றிரவு பெற்றுள்ளேன். அங்கு பதுங்கியிருந்த தாவீதுக்கு அது எப்படிப்பட்ட ஒரு நேரமாக இருந்திருக்கும்! அவனுக்கு எப்படி செல்வதென்று தெரியவில்லை, அவனுக்கு எதை கொண்டு சண்டையிடுவதென்று தெரியவில்லை, ஏனெனில் எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமென்று அவன் அறிந்திருந்தான். ஆனால் திடீரென்று முசுக்கட்டை செடிகளின் நுனிகளிலே செல்லும் காற்றின் இரைச்சலை அவன் கேட்டான். கர்த்தர் அவனுக்கு முன்பாக செல்கிறார் என்பதை அவன் அறிந்து, போருக்குப் புறப்பட்டான் சென்ற இரவின் செய்திக்குப்பிறகு அதைப்போன்ற ஓர் உணர்ச்சியை இன்றிரவு நான் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையிலேயே மிகவும் இருண்ட நேரத்தில் நான் இருக்கிறேன். தேவாலயத்தில் தேவதூதர்களைக் கண்ட பிறகு ஏசாயா பெற்ற உணர்ச்சியைப் போல், நானும் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் என்னும் உணர்ச்சியைப் பெற்றுள்ளேன். ஆனால் கவனியுங்கள், அதை நான் எப்படியாவது சந்தித்தாக வேண்டும். ஒரே ஒரு காரியம் என்னவெனில் சத்துரு எங்கிருந்தாலும் அவனைச் சந்திக்க, முசுக்கட்டை செடிகளின் நுனியில் செல்லும் இரைச்சலைக் கேட்பதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதை நாம் செய்ய தேவன் துணை புரிவாராக!  35. இப்பொழுது பன்னிரண்டு மணிக்கு ஒரு நிமிடம் உள்ளது என்று நினைக்கிறேன். '62ம் ஆண்டு அதன் காரியங்களுடன் கடந்து செல்லட்டும். 36. இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் எழுந்து நிற்போம். இந்த பொறுப்பு உங்கள் ஒவ்வொருவர் மேலும் உள்ளது. "பின்னானவை களை மறந்து" என்று பவுல் கூறினான். கடந்த ஆண்டில் நாம் செய்த தவறுகள் அனைத்தும் மறந்து, "பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி தொடருகிறேன்.'' தேவனே, இத்தனை ஆண்டுகளாக நான் செய்து வந்த தவறுகள் அனைத்தும் மன்னிப்பீராக, என்னை மன்னியும். சபையே, என்னை மன்னியுங்கள், என் ஊழியத்தில் நான் தவறினதாக உணருகிறேன். தேவனே. அதற்காக என்னை மன்னியும். சபையே, என் தவறுகள் அனைத்தும் மன்னியுங்கள், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயம் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருவேன்: நாளை என்ன வைத்துள்ளது என்பது அறியேன். ஆனால் 1963 யார் கையிலுள்ளது என்பதை அறிவேன்.  37. இப்பொழுது தேவனிடம் நமது கரங்களையுயர்த்தி நமது பாவ அறிக்கையை செய்யும் இந்நேரத்தில் நமது சொந்த வழியில் ஜெபம் செய்து, வரப்போகும் ஆண்டில் நமக்குதவி செய்ய தேவனைக் கேட்போமாக. 38. பரலோகப் பிதாவே, நாங்கள் நின்று கொண்டிருக்கும் இந் நேரத்தில் எத்தனையோ எண்ணங்கள், கடந்த ஆண்டில் நாங்கள் செய்த தவறுகள் அனைத்தும் எழுந்து மறைகின்றன. நாங்கள், 62ம் ஆண்டின் மரணத்தையும், 63ம் ஆண்டின் பிறப்பையும் அணுகிக் கொண்டிருக்கிறோம். ஓ, தேவனே, ஏணியில் நாங்கள் ஒரு படி மேலேறிச் சென்று, இயேசுவையும் அவருடைய திட்டத்தையும் நாங்கள் காணும் வரைக்கும் ஏறிக்கொண்டிருக்கும்படி செய்யும். கர்த்தாவே, பழைய ஆண்டு மறைந்து, புதிய ஆண்டு வரவிருக்கும் இந்நேரத்தில் ஜெபத்தில் தரித்திருக்கிற ஒவ்வொருவரிலும்; பழைய மனுஷனின் பாவமும் அவிசுவாசமும் எங்கள் இருதயத்திலிருந்து மறைந்து 1963ம் ஆண்டுடன் கூட புது பிறப்பு மகத்தான காற்று இரைச்சலுடன் வந்து எங்களை நிரப்பி, எங்களை கிறிஸ்துவுக்கு புது சிருஷ்டிகளாக்கும்படி செய்வீராக. 39. எங்களை தகுதியுள்ள ஊழியராக்கும். எங்கள் கடந்த காலத்தை மன்னியும். எங்கள் எதிர் காலத்தை ஆசீர்வதியும். ஓ, தேவனாகிய கர்த்தாவே, யேகோவாவே, உமது வல்லமையுள்ள கரத்தினால் எங்களை வழி நடத்தும். இங்குள்ள போதகர்களை ஆசீர்வதியும். சபையோர் அனைவரையும், இங்கு விஜயம் செய்துள்ளவர்களையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, எங்களோடு கூட இருப்பீராக. நாங்கள் உமது தாசர்கள். உமது ஆவியின் வல்லமை எங்கள் வாழ்க்கையிலும் எங்களிலும் முதன்மை ஸ்தானம் வகிப்பதற்காக, இந்த 1963ம் ஆண்டில் எங்களை முழுவதுமாக உமக்குத் தருகிறோம். தேவனே, எங்களுக்குதவி செய்யும். எங்களை மன்னித்து எங்களுக்குதவி செய்யும் படியாக வேண்டிக்கொள்கிறோம். மகத்தான மனிதர்களை எழுப்பும்! விசுவாசத்தில் மகத்தான போர் வீரர்களை எழுப்புவீராக! கர்த்தாவே, இந்த ஆண்டில், பாறைக்கு கீழேயுள்ள அந்த கன்மலையாகிய மறைவான மன்னாவை எங்களுக்கு திறந்தளித்து, தேவனுடைய திட்டத்தை நாங்கள் காணும்படி செய்யும். கர்த்தாவே, எங்கள் வாழ்க்கையின் கூர்நுனிக்கோபுரத்தை தலைக்கல்லால் மூடுவீராக. எங்கள் ஒவ்வொருவர் மேலும் கிறிஸ்து இயேசுவாகிய தலைக்கல்லை வைப்பீராக. அவருடைய பெரிய மகத்துவமுள்ள பரிசுத்த ஆசீர்வாதங்கள் எங்கள் அனைவர் மேலும் தங்குவதாக. பரிசுத்த ஆவியின் அக்கினி எங்கள் மேல் இறங்குவதாக, உயிர்த்தெழுதலின் வல்லமை வெளிப்படுவதாக. தேவனே, இன்றிரவு உமக்கு எவ்வளவாக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்! நாங்கள் உம்முடையவர்கள். கர்த்தாவே, எங்களை முழுவதுமாக உமக்குத் தருகிறோம்.  40. எங்கு செல்ல வேண்டுமென்றும், எப்படி செல்ல வேண்டுமென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும் அறியாதவனாய் நான் புறப்பட்டு செல்லும் போது, சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் என்னை வழி நடத்துவீரென்று நான் உம்மையே நம்பியிருக்கிறேன். நான் உமது அப்பிரயோஜனமான ஊழியக்காரன். நான் சர்வல்லமையுள்ளவரின் கனத்துக்கும் மகிமைக்கும் உபயோகிக்கப் படுவேனாக. பிதாவே, இதை அருளும். 41. எங்கள் ஜெபங்களை ஏற்றுக்கொள்ளும். எங்கள் முயற்சிகளை ஆசீர்வதியும். வியாதியஸ்தர்களையும். ஆவிக்குரிய விதமாகவும் சரீரப்பிரகாரமாகவும் அவதியுறுபவர்களையும் சுகமாக்கும். எங்களை உமது ஊழியக்காரர்களாக்கிக் கொள்ளும். நாங்கள் களிமண், நீர்குயவன். நாங்கள் கிறிஸ்துவில் அவருடைய சரீரத்தின் அங்கத்தினராக பொருந்தும்படி. எங்கள் ஒவ்வொருவரையும் உமக்கு சொந்தமான வழியில் வனையும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், அவருக்காகவும் அவருடைய சுவிசேஷத்திற்காகவும், இதை கேட்கிறோம். ஆமென். ஆமென்.  42. (ஒரு சகோதரன் அந்நிய பாஷைபேசுகிறார். மற்றொரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார் - ஆசி). நன்றி, பிதாவே, தேவனே, இந்த புத்தாண்டு ஆலோசனைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அது எங்களை நம்பிக்கையுடனும், இதை அறிந்திராத மனிதர்களுக்கு, இந்த வார்த்தைகளைப் பேசி, செய்தி உண்மையென்று அறிவித்ததனால் உண்டாகும் ஆறுதலுடனும் வெளியே அனுப்புகிறது. இந்த செய்தியை ஆதரிக்கவேண்டு மென்று எங்களை நீர் கேட்கிறீர். ஆண்டவரே, நாங்கள் உம்மையும் உமது வார்த்தையையும் ஆதரிக்க, எங்களுக்குத் தெரிந்த எல்லாவற் றையும் செய்வோம்.  43. நாங்கள் இவ்வாறு ஜெபம் செய்ய வேண்டுமென்று கற்றுத்தந்த அவருடைய நாமத்தினால் எங்களை ஏற்றுக்கொள்ளும் (சகோ. பிரன்ஹாமும் சபையோரும் ஒன்றாக ஜெபிக்கின்றனர் - அசி:) "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக, அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு விரோதமாய் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும், எங்களை சோதனைக்குட்பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்றும் எங்களை இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்,"  44. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களைக்காக்கக்கடவர். இப்பொழுது வீடுகளுக்குச் செல்ல வேண்டியவர்கள்... ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன, '63ம் ஆண்டில் ஐந்து நிமிடங்கள் கடந்துவிட்டன. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இராப்போஜனத்துக்காக தங்க விரும்புகிறவர்களை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரும். இது ஒரு சாராருக்கு மாத்திரமுள்ள இராப்போஜனமல்ல, கிறிஸ்துவுடன் ஐக்கியங்கொண்டுள்ள ஒவ்வொருவரும் இதில் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். இதை நாம் முதலாவது செய்யும் காரணம் என்னவெனில், நாம் பயணத்தை தொடங்குகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் பயணம் தொடங்கும் முன்பு, ஆட்டுக்குட்டியைக் கொன்று கசப்பான கீரையைத் தின்றார்கள், அதன் பின்பே அவர்கள் பயணம் தொடங்கினார்கள். “இது இன்றிரவு எவ்வளவு பொருத்தமாயுள்ளது'' என்று நான் எண்ணினேன். ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டு விட்டார், விருந்து ஆயத்தப்படுத்தப்பட்டு விட்டது, இது நள்ளிரவாயுள்ளது. அவர்கள் நள்ளிரவில் தான் புசிக்கின்றனர் என்று உங்களுக்குத் தெரியும். எனவே நாம்; எங்களுடன் தங்கி, முன் வைக்கப்பட்டுள்ள பிரயாணத்துக்கு ஆயத்தமாக விரும்புகிற வர்களே, எங்களுடன் நீங்கள் பங்கு கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.  45. இப்பொழுது போக வேண்டியவர்கள், உங்கள் வீடுகளுக்குச் செல்லலாம். நான் உங்களை மீண்டும் சந்திக்கும் வரைக்கும், தேவன் உங்களோடிருப்பாராக ஆமென். மற்றவர்கள் அமர்ந்திருங்கள். பிறகு நாம் இராப்போஜனத்தை தொடங்கலாம், சகோதரி இப்பொழுது..... சரி, ஐயா. நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடிருப்பாராக!  46. வெளியிலே மற்றவர்கள் போவதற்காக நாம் காத்திருக்கும் இந்நேரத்தில், நாம் மறுபடியும் அதை பாடுவோம். அவர்கள் போன பிறகு அமைதியாகி விடும். இது மிகவும் பயபக்தியான ஒருகாரியம். வேதத்திலிருந்து மிக, மிக, மிக. நல்ல ஒரு பாகத்தை இன்னும் சிறிது நேரத்தில் நான் வாசிக்கப்போகின்றேன். இப்பொழுது நாம் மறுபடியும் பாடுவோம். நாம் சந்திக்கும் வரை! (யாருடனாவது நாம் கைகுலுக்குவோம்) (உங்கள் வாழ்க்கையில் ஏதாகிலும் தவறிருந்தால் நீங்கள் தவறிழைத்த மனிதன் இங்கிருந்தால்) அவரிடம் இப்பொழுது சென்று சமரசம் செய்து கொள்ளுங்கள்) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை (பியானோ வாசிப்பவர்) பியானோவினிடம் தயவு செய்து வருவீர்களா?)... இருப்பாராக! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் உங்களுடன் இருப்பாராக! அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் சூரிய வெளிச்சத்திலும் நிழலிலும் அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார். 47 அதை மறுபடியும் பாடுவோம் அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் சூரிய வெளிச்சத்திலும் நிழலிலும் அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் 48. அது அழகானதல்லவா? அவர்கள் அமைதியாகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் நாம் மறுபடியும் அதைப் பாடுவோம்: - அவர்.... (உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்) ....... கொள்கிறார் அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார் சூரிய வெளிச்சத்திலும் நிழலிலும் அவர் உங்களுக்காக கவலை கொள்கிறார். 49. பரலோகப் பிதாவே, அது உண்மையென்று நாங்கள் அறிந்திருக்கிறபடியால், மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். எங்கள் மிகுந்த அந்தகார நேரத்திலும், சூரிய வெளிச்சத்திலும், அவர் விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை. நீதியாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மேல் எங்கள் நம்பிக்கை கட்டப் பட்டிருப்பதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆண்டவரே, இவ்வுலகின் புகழின் மேல் நாங்கள் நம்பிக்கை வைப்பதில்லை. இந்த இனிமையான சரீர அமைப்பின் மேல் நாங்கள் நம்பிக்கை வைக்க தைரியப்பட மாட்டோம். ஆனால் முழுமையாக இயேசுவின் நாமத்தின் மேல் சார்ந்திருப்போம். பிதாவே நாங்கள் எவ்வளவாக உமக்கு நன்றி செலுத்துகிறோம்! 50. நீர் எங்களுக்கு விட்டு சென்ற சில உடன்படிக்கைகளில் ஒன்றில் இப்பொழுது நாங்கள் பங்கு கொள்ளப் போகின்றோம். அவைகளில் ஒன்று தண்ணீர் ஞானஸ்நானம். மற்றொன்று இராப்போஜனம். அடுத்தது பாதங்களைக் கழுவுதல். ஓ, தேவனே, இது பஸ்கா ஆட்டுக்குட்டியென்று அறிந்து, நாங்கள் பயபக்தியுடன் பிரவேசிக்கிறோம். பிள்ளைகளுக்கு முன்பாக அந்த பெரிய வனாந்தரப் பிரயாணம் வைக்கப்பட்டுள்ளது. பஸ்கா ஆட்டுக் குட்டியைப் புசிப்பதற்கு முன்பு இரத்தமானது வாசல்களின் நிலைக்கால்களில் பூசப்படவேண்டும்.  51. தேவனே, இப்பொழுது எங்கள் இருதயங்களை ஆராய்ந்து பாரும். கர்த்தாவே, அங்கு இரத்தம் இருக்கின்றதா? இல்லை யென்றால், இப்பொழுது அதைத் தடவி எங்கள் பாவங்களைப் போக்கி அவைகளைமூடி, அவைகளிலிருந்து எங்களை, விலகச்செய்து, தேவனுடைய குமாரனும் எங்கள் இரட்சகருமான ஆட்டுக்குட்டி யானவரின் சரீரத்தைப் புசிக்கவும் இரத்தத்தை பானம் பண்ணவும் வரப்போகும் இந்நேரத்தில், எங்கள் பிதாவின் பார்வையில் நாங்கள் பரிசுத்தமும் சமர்ப்பிக்கப்படத்தக்கவர்களுமாக இருக்கவேண்டுமென்று ஜெபிக்கிறோம். நாங்கள் படிக்கும்போது, பிதாவே , எங்கள் இருதயங்களை ஆராய்ந்து பார்த்து, எங்களை உம்முடையவர்களாக்கிக்கொள்ளும். ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.  52. கொரிந்தியரின் புத்தகம் 11ம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களை, 23ம் வசனம் தொடங்கி வாசிக்க விரும்புகிறேன். இது பவுல் கொரிந்து சபையுடன் பேசுவதாகும். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து;  ஸ்தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப்பிட்கப்படுகிற என்னு டைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.  போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. நீங்கள் இதைப் பானம் பண்ணும்போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.  ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.  இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.  எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன்.  என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால் தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.  இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி யுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.  நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந் தீர்க்கப்படோம்.  நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்த ராலே சிட்சிக்கப்படுகிறோம்.  ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம் பண்ணக்கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.  நீங்கள் ஆக்கினைக் கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால், வீட்டிலே சாப்பிடக் கடவன்; மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம் பண்ணுவேன். 1 கொரி 11:23-34 53. இதை நான் நினைக்கும் போது; மிகவும் பயபக்தியான நேரம்! இந்த இராப்போஜனமும் பாதங்களைக் கழுவுதலும் முதலில் அளிக்கப்பட்ட போது... பாதங்களைக் கழுவுதலை இன்றிரவு நாம் அனுசரிக்க முடியாது, ஏனெனில் நமக்குத் தண்ணீர் இல்லை. தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டு விட்டது, மலஜல அறையிலும் கூட தண்ணீர் வசதியில்லை. இன்றிரவு நாம் ஆராதனை நடத்துவதற் கென, அவர்களால் இயன்றவரை எல்லாவற்றையும் தற்காலிகமாக இணைத்து நமக்கு இடவசதி செய்து கொடுத்துள்ளனர். ஆனால் நாம் அவர்கள் செய்தவிதமாக செய்வோம். லூக்கா அவ்வாறு கூறினான் என்று நினைக்கிறேன். அதாவது, "அவர்கள் ஸ்தோதிரப் பாட்டைப் பாடின பின்பு, புறப்பட்டுப் போனார்கள்” என்று. இராப்போஜனம் எதைக் குறிக்கிறது தெரியுமா? தொடக்கத்தில் இந்த நியமம் எகிப்து தேசத்தில் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட போது, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர். இன்றிரவு நாமும் அதேவிதமாக உணருகிறோம்; அதாவது, நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று. நமக்கு முன்னால் அந்த பிரயாணம் உள்ளது. 54. அவர்களுக்கு ஒரு அடையாளம் இருந்தது. சங்காரத் தூதன் வரும்போது, அவர்களுடைய கதவில் இரத்தம் பூசப்பட்டிருக்க வேண்டும், இல்லையேல் மூத்த மகன் அல்லது மூத்த பிள்ளை அந்த வீட்டில் மரித்தான். கருத்து என்னவெனில் உண்மையான அர்த்தம் என்னவெனில், இரத்தம் முதலாவதாக பூசப்பட வேண்டும். பவுல் அதை எவ்வாறு கூறியுள்ளான் என்று கவனித்தீர்களா? "அபாத்திர மாய்ப் போஜனாபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்தறியாததினால். தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.” அதன் அர்த்தம் அதுவே. அதாவது கர்த்தருடைய இராப்போஜனத்தில் அபாத்திரமாய் பங்கு கொள்கிறவனுக்கு மரணம் - ஆவிக்குரிய மரணம் - நேரிடும்; வெளியே உலகத்தைப் போல் நடந்து கொண்டு, குடிப்பது போன்றவைகளைச் செய்து விட்டு கர்த்தருடைய பந்திக்கு வருவதென்பது. அப்படி நாம் செய்யவே கூடாது. நமது இருதயங்களையும், நமது கரங்களையும்.... நமது சிந்தைகளையும் பொல்லாத சிந்தனைகளிலிருந்து சுத்திகரித்துக் கொண்டு கர்த்தருடைய பந்திக்கு பக்தியோடும் பரிசுத்தத்தோடும் வரக்கடவோம். ஏனெனில் நாம் நமது பலியாகிய கிறிஸ்து இயேசுவுடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். அவர் மாத்திரமே நமது இரட்சிப்பு.  55. இன்றிரவு நாம் செய்யப் போகும் விதம். மூப்பர்களில் ஒருவர் இங்கு நிற்பார். சகோ. ஜேபல். சகோ. ஜேபல், மேடை யிலிருந்து நீங்கள் அழைத்தால், இவர்கள் மேடைக்கு வந்து முதலாம் வரிசையில் நிற்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு விருப்பமானால், இன்னும் சிறிது நேரத்தில் சகோ. ஜேபல், நாங்கள் இராப்போஜனத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபித்தவுடனே , உங்களுக்கு வழிகாட்டுவார்.  56. இந்த அப்பம் ஒரு கிறிஸ்தவனால் உண்டாக்கப்பட்டது. இது புளிப்பில்லாத அப்பம். நீங்கள் கவனிப்பீர்களானால், அதை நீங்கள் வாயில் போடும்போது, மிகவும் சொறசொறப்பாய் உள்ளது, கசப்பாயுள்ளது. அது சுருக்கம் விழுந்து, உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டுள்ளது. இது கர்த்தராகிய இயேசுவின் உடைக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட சரீரத்தைக் குறிக்கிறது. ஓ, அதை நான் நினைக்கும் போதெல்லாம், என் இருதயத் துடிப்பு நின்று விடும் போல் தோன்றுகிறது. அவர் நொறுக்கப்பட்டு, காயப்பட்டு, அடிக்கப்பட்டார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது- களங்கமற்ற தேவனுடைய குமாரன்! அவர் ஏன் அப்படி செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் குற்றவாளியாயிருப்பதால். அவருடைய பலியின் மூலம் நான் அவரைப் போல் தேவனுடைய குமாரனாக ஆக வேண்டும் என்பதற்காக அவர் என்னைப் போல் பாவியானார். என்ன ஒரு தியாகம்! 57. இப்பொழுது நாம் தலைவணங்குவோம். மிகவும் பரிசுத்த முள்ள தேவனே, உலோகத்தினால் செய்யப்பட்ட இந்த தட்டில் இன்றிரவு நான், உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு காயப்பட்டு, அடிக்கப்பட்ட நமது கர்த்தரின் சரீரத்துக்கு அடையாளமாயுள்ள அப்பத்தை வைத்து என் கைகளில் பிடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த தீர்க்கதரிசி, "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானோம்'' என்று கூச்சலிட்டான். ஓ, கர்த்தாவே, அதை நாங்கள் எவ்வளவாக நினைவுகூருகிறோம்! இன்றிரவு என்னை அந்த பலியுடன் இணைத்துக் கொள்ளும்போது, கர்த்தாவே, இந்த சபையோரும் அவ்வாறே தங்களை அந்த பலியுடன் இணைத்துக் கொள்ளும் போது, நம்முடைய ஆண்டவரை நாம் நினைவு கூருவோமாக. இந்த அப்பத்தை நாம் வாயில் போடும் போது, அவருடைய மரணத்தையும், அவருடைய பாடுகளையும், அவர் நம் நிமித்தம் பட்ட எல்லாவற்றையும் நாம் நினைவு கூருவோமாக. தேவனே, நாங்கள் அபாத்திரமான ஜனங்கள். இப்படிப்பட்ட பரிசுத்தமான காரியத்துக்கு நாங்கள் தகுதியற்றவர்கள். எனவே கர்த்தாவே, உமது பரிசுத்தமும் உமது பிரசன்னமும், உமது இரத்தமும் எங்கள் இருதயங்களைச் சுத்திகரிப்பதாக. இதை நாங்கள் உட்கொள்ளும் போது, எங்கள் வாழ்நாள் முழுவதும் உம்மை இரவும் பகலும் சேவிப்போமென்று எங்கள் மனதில் தீர்மானிக்க அருள்புரியும். இந்த அப்பத்தை அது உபயோகப் படுத்தப்படும் நோக்கத்திற்காக, பரிசுத்தப்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.  58. இதை என் கரங்களில் முப்பத்து... ஏறக்குறைய முப்பத் மூன்று ஆண்டுகளாக நான் என் தேவனுக்கு ஊழியம் செய்து வந்திருக்கிறேன். என்னைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். அவருடைய மெய்யான இரண்டு துளி இரத்தத்தை இன்றிரவு என் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தால், நான் என்ன செய்வேன் என்று நினைக்கிறேன். அதை கொண்டு நான் என்ன செய்வேன்? ஆனால், உங்களுக்குத் தெரியுமா, அவருடைய பார்வையில் அதைக் காட்டிலும் மேலான ஒன்றை இன்றிரவு என் கையில் பிடித்திருக் கிறேன். அது அவருடைய இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்டது, அவருடைய சபை. எனவே நான் இதையும் திராட்சை ரசத்தையும் கைகளில் பிடித்துக்கொண்டிருக்கும் போது, அதை நினைவுகூருகிறேன். அவர், "இது முதல் இந்த திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லை” என்றார். பாவத்தோடு யுத்தம் முடிந்த பின்னர், நாம் மறுபக்கத்தை அடைந்தவுடன் செய்யும் முதல் காரியம், கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கு கொள்வதே என்பதைக் கவனியுங்கள்.  59. இந்த திராட்சை ரசத்தை நாம் ஆசீர்வதிக்கும்போது தலை வணங்குவோம். பரலோகப் பிதாவே, இயேசுவின் இரத்தத்துக்கு அடையாளமாயுள்ள இத்த திராட்சை ரசத்தை என் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், பெருக்கெடுத்து ஓடின அந்த இரத்தத்தின் மூலம் எவ்வாறு என் பாவங்கள் நீங்கின என்பதை நினைவுகூருகிறேன். அவை மறதி என்னும் கடலில் போடப்பட்டு, இனி ஒருபோதும் நினைக்கப்படாமல் இருக்கும். ஒரு நாள் மருத்துவமனையில், மரித்துக்கொண்டிருக்கும் வாலிபனாக நான் படுத்துக்கொண்டிருந்த போது, இந்த இரத்தத்தினால் நீர் என்னை இரட்சித்தீர். ஓ தேவனே, உமக்கு நான் எவ்வளவாக நன்றி செலுத்துகிறேன், கர்த்தாவே. அதன் பிறகு, பரிசுத்த ஆவியின் மூலம் ஜனங்களை கல்வாரிக்கு வழி நடத்தி, அவர்கள் பரம வீட்டிற்கு செல்லும் பாதையை காண்பிக்கும் பொறுப்பை எனக்கு அருளினீர். பிதாவே உமக்கு நன்றி. இது உபயோகப்படுத்தப்படும் நோக்கத்திற்காக இதை பரிசுத்தப்படுத்துவீராக. இன்றிரவு இந்த இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவரும், அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள அந்த பிரயாணத்துக் காக ஆவிக்குரிய பெலனையும் சரீர பெலனையும் அடைவார்களாக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.  60. (சபையோருக்கு இராப்போஜனம் கொடுக்கப்படுகின்றது. ஒலி நாடாவில் காலி இடம்- ஆசி), இங்கு நின்று கொண்டு, குடும்பங்கள் வருவதைக் கவனிக்கும்போது, இப்படித்தான் இந்நாட்களில் ஒன்றில் இருக்கும் - குடும்பம் குடும்பமாக, வரிசை வரிசையாக. குழு குழுவாக, தனித்தனியாக. அவரை நாம் சந்திக்கும் போது, அது எப்படிப்பட்ட தருணமாயிருக்கும்! இவ்வுலகில் அவரை விசுவாசித்து, அவர் மேல் நம்பிக்கை வைத்த இந்த மானிடர் அனைவரும், அந்த நாளில் அவரைச் சந்திக்கும் போது! அது அற்புதமாயிருக்கும் அல்லவா?  61. தண்ணீர் இல்லாத காரணத்தால், இன்றிரவு பாதங்கள் கழுவுதலை நாம் கைவிட வேண்டியதாயுள்ளது. தற்பொழுது நமக்கு அதற்கான போதிய வசதிகள் இல்லை, ஆனால் அவை விரைவில் பொருத்தப்படும் என்று நம்புகிறோம். அவர்கள் நல்ல விதமாக முன்னேறி, இந்த புதிய கூடாரத்தை வேகமாக கட்டிக் கொண்டு வருகின்றனர். ஆண்டின் முதலாம் தேதியன்று, இந்த நேரத்தில் இராப்போஜனத்தில் பங்கு கொள்வது மிகவும் பொருத்தமானதென்று எண்ணுகிறேன். 62. நகரத்தின் புறம் பேயிருந்து வந்திருப்பவர்களே, நாளை வீடு திரும்பும்போது, மிகவும் கவனமாக காரோட்டிச் செல்லுங்கள். தேவன் உங்களோடிருப்பாராக. அருகாமையிலுள்ளவர்களே, தேவன் உங்களோடிருந்து உங்களுக்குதவி செய்வாராக, இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், அரிசோனாவில் நடக்க விருக்கும் அடுத்த கூட்டத்திற்காக நான் செல்லவேண்டும். பிறகு, தேவன் சித்தம் கொண்டால், நான் வாக்களித்தபடி, ஏழு முத்திரைகளைக் குறித்து பிரசங்கிக்க நான் மறுபடியும் உங்களிடம் வருவேன். நான் நிச்சயம் உங்கள் ஜெபங்களை வாஞ்சிக்கிறேன் உங்களை எனக்கு அதிகம் அவசியமுள்ளது, எனவே எனக்காக ஜெபிக்க மறவாதீர்கள். எல்லாமே உங்களுக்கு நன்றாக நடக்கட்டும். நீங்கள் வருவதைக் குறித்தும், சுவிசேஷத்தைக் குறித்து நான் கூறுவதை நீங்கள் எவ்வளவு கவனமாகக் கேட்டு வருகிறீர்கள் என்பதைக் குறித்தும் நான் நிச்சயம் என் பாராட்டுதலைத் தெரிவிக்கிறேன். இப்பொழுது நாம் மாறுதலை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். உங்கள் தயவுக்காக என் நன்றியைத் தெரிவிக்கிறேன். 63. என்னைப்போன்ற எளியவன் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வருவதைக் கேட்பதற்காக உங்களில் பலர் அநேக மைல் கள் காரோட்டி இங்கு வருகின்றீர்கள். அதைக் காட்டிலும் ஏதோ மேலான ஒன்றுள்ளது என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன் - நான் பிரசங்கிப்பதை கேட்பதற்கு வருவதைக்காட்டிலும். ஏனெனில் உங்களிடம் காண்பிப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. நான் படிப்பில்லாதவன், பிரசித்தியில்லாதவன; என்னில் ஒன்றுமேயில்லை, அப்படியிருக்க, ஜனங்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் காரோட்டி வந்து, இங்கு காலை இரண்டு மணி வரை நின்று காத்திருப்பதை நான் காணும்போது, என்னிடமுள்ள ஒன்றுக்காக அதுவல்ல. அது கிறிஸ்துவுக்காக. அவரை நீங்கள் நேசிப்பதனால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நானும் அவரை நேசிக்கிறேன். நாம் ஒருமித்து அவரை நேசிக்கிறோம். அவரை நாம் நேசிக்கும் காரணத்தால், நாம் பிரிய வேண்டிய அவசியமே இராது. இங்கு சிறிது காலம் நாம் பிரிந்திருக்க நேரிடும். ஆனால் காலம் கடந்து செல்லும் போது, நாம் மறுபடியும் ஒன்று சேர்ந்து விடுவோம். அந்த இடத்திற்கு ஜனங்களை நடத்த முயல்வதே என் ஆவலாயுள்ளது. 64. இந்த புத்தாண்டு தொடக்கத்தில் “எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று கூறாமல், "கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக" என்று கூறுகிறேன், அவர் அப்படி செய்வாரானால், இந்த புத்தாண்டில் அது மாத்திரமே நமது தேவையாயுள்ளது. அவர் அப்படி செய்வாரென நம்புகிறேன்.  65. அவருடைய கிருபையினால், நாம் இந்த ஆண்டில் முயல் வோம். அவர் தமது கிருபையினால் என்னை உயிரோடுவைத்து. உங்களை உயிரோடு வைப்பாரானால், சென்ற ஆண்டைக் காட்டி லும் இந்த ஆண்டு சற்று கூடுதலாக நல்ல போதகராக இருப்பே னென்று நம்புகிறேன். அவருடன் இன்னும் அதிகமாக நெருங்கி வாழவும், இன்னும் அதிகமாக உண்மையுள்ளவனாயிருக்கவும் அரும்பாடு படுவேன். நான் உங்களுக்கு அளிக்க வேண்டுமென்று அவர் விரும்புவதில் ஒன்றையும் மறைத்து வைக்காமல், எனக்குத் தெரிந்தமட்டில் என்னால் இயன்றவரை அதை உங்களுக்களிப் பேன். உங்களுக்கும் அத்தகைய உணர்ச்சி உள்ளதென்று எனக்குத் தெரியும், நாமனைவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய விரும்புகிறோம். ஏனெனில் சாயங்கால வெளிச்சம் மங்கிக்கொண்டு வருகிறது. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது, ஆவிக்குரிய விதமாய் பூமியானது குளிர்ந்து வருகிறது, அது நமக்குத் தெரியும். சபை குளிரடைந்து வருகிறது, எழுப்புதல் முடிந்துவிட்டது. அடுத்ததாக என்ன வரப்போகிறதென்று நமக்குத் தெரியாது. அது என்ன வாயினும், அதற்காக நாம் தேவனை நம்பியிருப்போம். இப்பொழுது சில சமயங்களில் நாம். 66. இந்த கூடாரம் உலகிலேயே மிகச் சிறந்த போதகர்களில் ஒருவரைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். சகோ. ஆர்மன் நெவில், தேவபக்தியுள்ளவர், நல்லவர். நான் இல்லாதபோது, நான் இங்குள்ள போது வகிக்கும் பொறுப்பை போன்று, அவர் முழு பொறுப்பையும் வகிக்கிறார். தர்மகர்த்தாக்கள், மூப்பர்கள் ஆகியவர்கள் இப்பொழுதுள்ளவாறே தங்கள் அலுவல்களில் நிலை கொண்டிருக்க வேண்டும். இது நமது தலைமை அலுவலகம். இங்கு தான் நாங்கள்.... நாங்கள் இருக்கும் இடம் இதுவே, பில்லிபால் என்னுடன் வெளியே இருக்கமாட்டான், கூட்டங்களுக்கு மாத்திரம் என்னுடன் இருப்பான், பிறகு திரும்பி வந்துவிடுவான். அலுவல்கள் எல்லாமே வழக்கம் போல் இங்கிருந்துதான் செயல்படுத்தப்படும். நான் அங்கு செல்வதனால், உங்களை விட்டுச் செல்கிறேன் என்று அர்த்தமல்ல. ஒரு தரிசனத்தின் நிமித்தம் நான் செல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதன் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாது. அது முழு சபையின் அபிவிருத்திக்காக இருக்குமென்று நான் நம்புகிறேன். கர்த்தருடைய வழிநடத்துதலை நாம் பின்பற்றினால், அது நம்மெல்லாருக்கும் நல்லதென்று அறிவேன். அதை செய்ய மாத்திரமே நாம் அறிந்திருக் கிறோம். அது எனக்கு சுலபமான ஒன்றல்ல: இதற்கு முன்பு ஒருமுறை இந்த சபையை விட்டு வெளியே போக வேண்டி யிருந்தது என்பதை நினைவுகூருகிறேன். பழைய காலத்தவர் களாகிய உங்களில் சிலருக்கு, அதை என்னால் செய்ய முடியவில்லை என்பது ஞாபகமிருக்கும். நான் ஜனங்களை நேசிக்கிறேன். 67. நான் சிறு பையனாயிருந்தபோது, நான் நேசிக்கப்படவில்லை, யாருமே எனக்காக கவலை கொள்ளவில்லை. யாராவது என்னை நேசிக்கிறார்கள் என்று கண்டால், அவர்களுக்காக நான் மரிக்க வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் இப்பொழுது யாராகிலும் உங்களை நேசிப்பதால் யாராகிலும் கவலை கொள்வதால் - ஒருமுறை நான் கம்பத்தில் ஏறிக் கொண்டிருந்த போது, என் கொக்கி அந்த பழைய கேதுரு கம்பத்திலிருந்து வழுக்கி வெளியே வந்து விட்டது. கயிறு முடி (knot) உயரத்தில் இருந்தது. அதை நான் என் குதி முள்ளில் (spur) அடித்து திரும்பினபோது, பதினைந்து அடி உயரத்தி லிருந்து கீழே விழுந்து, கைகளினால் ஊன்றிக் கொண்டேன். அதைக் கண்ட ஒரு ஸ்திரீ சத்தமிட்டாள். அவள் என்னை இப்படி தட்டிக் கொடுத்தாள். எனக்கு எப்பொழுதுமே அந்த ஸ்திரீ என்றால் விருப்பம், அவள் எனக்காக கவலை கொண்டாள். எனக்காக கவலை கொண்டவள் அவள் ஒருவள். எனக்காக கவலை கொள்ளும் யாரையாகிலும் நான் நேசிப்பேன் என்று எண்ணினேன். 68. சில நாட்களுக்கு முன்பு நான் கீழே பட்டினத்திற்கு சென்றிருந்தேன். கடந்த நாட்களையும், கர்த்தர் எனக்கு செய்த நன்மைகளையும் அங்கு யோசித்து பார்த்தேன். நான் நிச்சயம் பாராட்டுகிறேன். உங்கள் அன்பிற்காகவும் ஐக்கியத்திற்காகவும் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். உங்களை நான் ஒருக்காலும் தவறான வழியில் நடத்த மாட்டேன். அது எப்பொழுதுமே என் அறிவுக்கு எட்டின வரைக்கும் சரியான வழியாக இருக்கும். நான் பேசினவைகளை எடுத்துப் பாருங்கள். நான் என்னைக் குறித்து ஒன்றுமே கூறினதில்லை, எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவைக் குறித்தே. பாருங்கள்? பாருங்கள்? உங்களை இந்த இடத்திற்கு வழி நடத்துவதற்கென எனக்குத் தெரிந்தவரைக்கும், அவருடைய வார்த்தைக்கு அருகாமையில் நிலைத்திருக்க முயன்று வந்திருக் கிறேன்.  69. இப்பொழுது உங்களை சகோ. நெவிலின் கரங்களில் சமர்ப்பிக்கிறேன்- முதலில் தேவனுடைய கரங்களில், பின்பு நடைபெறவிருக்கும் கூட்டத்திற்காக நான் மறுபடியும் உங்கள் மத்தியில் வரும் வரைக்கும், சபைக்கு போதகராயிருக்கவும் பிறப்புரிமைகளைப் பாதுகாக்கவும் சகோ. நெவிலின் கரங்களில். அச்சமயம், உங்கள் இருதயங்களை சிலிர்க்கச் செய்து, தேவனு டைய சபையை மகிமைப்படுத்தும்படியான ஒரு மகத்தான வெளிப்பாட்டை தேவனிடமிருந்து உங்களுக்கு கொண்டு வருவேன் என்று நம்புகிறேன்.  70. நாம் இராப்போஜனம் எடுப்பது வழக்கம். இதைக் காட்டிலும் அதிகம் கூற நான் விரும்பவில்லை, எனக்கு எத்தகைய உணர்ச்சியுள்ளது என்று உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நாம் பாடவேண்டிய பாடல். "என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியே” என்று எண்ணு கிறேன். இப்பொழுது நாம் நின்று அதைப் பாடும்போது, ஒருவரோடொருவர் கைகுலுக்கி, "தேவன் உங்களை ஆசீர்வதிப்பா ராக" என்று கூறுங்கள். என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது தெய்வீக இரட்சகரே நான் ஜெபிக்கும் போது எனக்கு செவிகொடும் என் குற்றங்களையெல்லாம் போக்கும் முழுவதும் உம்முடையவனாகட்டும் 71. இப்பொழுது நமது கரங்களை அவரிடம் உயர்த்துவோம்: என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே, தெய்வீக இரட்சகரே நான் ஜெபிக்கும் போது எனக்குச் செவிகொடும் என் குற்றங்களையெல்லாம் போக்கும் ஓ இன்று முதல் நான் முழுவதும் உம்முடையவனாகட்டும். 72. நாம் சந்திக்கும் வரை! நாம் மறுபடியும் சந்திக்கும்வரை என்னும் பாடலைப் பாடுவோம். எல்லோரும் சேர்ந்து பாடுவோம்: நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரை நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடிருப்பாராக! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கும் வரை; நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடிருப்பாராக! 73. இப்பொழுது நாம் தலைவணங்குவோம். சகோ. நெவில், நீங்கள் ஏன் ஜெபம் செய்து எங்களை அனுப்பக் கூடாது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!